×

திருக்கண்டலம் ஊராட்சியில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: திருக்கண்டலம் ஊராட்சியில் சேதமடைந்து கிடக்கும் 2 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள பனந்தோப்பு, கல்லேறுமேடு போன்ற பகுதியில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆனால் காலப்போக்கில் இந்த தொட்டியின் சிமென்ட் சிலாப்புகள் சேதமடைந்தது தொட்டி விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொட்டிகளை சுத்தம் செய்யாமல் உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் குடிநீர் தொட்டி உள்ளே சென்று சுத்தம் செய்வதற்கு தொட்டியின் வெளியே படிகட்டுகள் உடைந்து விட்டது. இதனால் இந்த தொட்டிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விழக்கூடிய அபாயம் உள்ளது. எனவே இந்த 2 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் அகற்றிவிட்டு, புதியதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திருக்கண்டலம் ஊராட்சியில் உள்ள பனந்தோப்பு, கல்லேறுமேடு போன்ற பகுதிகளில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு, 2 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. இந்த தொட்டிகள் சேதமடைந்துள்ளதால், அதனை அகற்றிவிட்டு, புதியதாக கட்டித்தர வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் முற்றைகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்தில் மனுவும் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விரைவில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் பிடிஒ அலுவலகம் முன்பு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

The post திருக்கண்டலம் ஊராட்சியில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirukandalam Panchayat ,Oothukottai ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில்...